Monday, January 18, 2010

பழசு

புதுமையை நேசிக்கும்
என் வீட்டுப் பிள்ளைகள்
இளமைக் காலத்தில்
நான் கட்டிய வீட்டை
இடித்துத் தள்ளினார்கள்

இதைக் கட்டிய காலத்தில்
எத்தனை ஆனந்தம்

வாடகை வீட்டில்
நாயடி பட்டவன்
வாழ்க்கைக்கு விடுதலை
வழங்கிய வீடு

கார்த்திகை மாதத்தில்
கரம்பற்றி வந்தவள்
வலது காலை
முதலில் வைத்து
வந்த இடம் இதுதான்

இடிக்கச் சொல்லும்
பிள்ளைகள் எல்லாம்
இங்குதான்
பிறந்தார்கள்

சீமந்தப் புத்திரன் முதல்
கணிஷ்டக் குமாரன்வரை
தூங்குவதற்குத் தூளிகட்ட
இந்த இடம்தான்
இடம் தந்து மகிழ்ந்தது

தொட்டி முற்றத்தைச்
சுற்றிஓடும் பிள்ளைகளைத்
துரத்தி விளையாடுவேன்
நான்

முற்றத்து வெயிலில்
வற்றல் இடுவாள்
மனைவி

காக்கைகளிடம் இருந்து
அதனைக்
காத்துத் தரும்
முற்றம்

இடிக்கக் கூடாது என்று
எடுத்துச் சொல்வதற்கு
எவ்வளவு முயன்றும்
என்னால் முடியவில்லை

விழுதுகள் வேரூன்றி
விட்ட பின்பு
ஆணிவேருக்கு
அதிகாரம் ஏது?

பார்த்துப் பார்த்து
கட்டிய வீடு
பழசாகிப்
போய்விட்டதாம்

அடுக்கு மாடி ஒன்று
அழகாய் எழும்புமென்று
ஆறுதல் கூறினார்கள்

ஆனாலும்
பயத்தை நெஞ்சிலே
பதுக்கி வைத்துக் கொண்டு
நானும்
பழசாகிக் கொண்டிருக்கிறேன்!

1 comment: