Monday, December 21, 2009

கடலோடு கலவாத நதி

கடலோடு கலவாத நதி
இது கடலோடு கலவாத நதி

உப்போடு உறவாட
ஒப்பாத மனம் கொண்டு
தப்பென்று சொன்னாலும்
தளராத நிலை கொண்டு

கடலோடு கலவாத நதி
இது கடலோடு கலவாத நதி

கடலுக்கு என்மீது
கடுங்கோபம் வந்தாலும்
கரைஎங்கும் எனைநோக்கி
காரி அது உமிழ்ந்தாலும்

கலங்காமல் நடை போடும் நதி
இது கலங்காமல் நடை போடும் நதி

வருகின்ற வழியெங்கும்
வயலுக்குத் தாகம்
வயல்தாகம் தீர்ப்பதிலே
எனக்கு உற்சாகம்

பிறர்தாகம் தணிக்கின்ற நதி
இது பிறர்தாகம் தணிக்கின்ற நதி

அதிகாலை ஏரோடு
அவன் கால்கள் சேறோடு
அவன் பாதம் கழுவத்தான்
நீ சென்று போராடு

உழைப்பாரைத் தொழுகின்ற நதி
இது உழைப்பாரைத் தொழுகின்ற நதி

இந்நாடு வளமோடு
எந்நாளும் இருக்க
இருபோகம் முப்போகம்
என்றாலும் செழிக்க

தன்னாலே பணி செய்யும் நதி
இது தன்னாலே பணி செய்யும் நதி


வற்றுகிற காலம் வரை
வயலுக்குச் சொந்தம்
வற்றிவிட்ட பின்னாலோ
மணலுக்குச் சொந்தம்

கடலோடு கலவாத நதி
நான் கடலோடு கலவாத நதி