Monday, January 18, 2010

அவள் சுமப்பது சிலுவை

ஆராதிக்க முடியாத அழகுடைய பெண்ணொருத்தி - மலத்தை
அள்ளிச் செல்ல வருகிறாள்

தோளிலே வாளியை சுமந்து கொண்டு - எங்கள்
தோட்டத்து வழியாக வருகிறாள்
வாயிலே புகையிலை குதப்பிக் கொண்டு - மலத்தின்
வாடையை மறக்கவே முயல்கிறாள்

வாளியில் சுமக்கின்ற நரகல் எல்லாம் - தன்
வாழ்க்கையின் பிரதிபலிப்பு என்கிறாள் - மகன்
வாய்க்கரிசி போடும்வரை வாளியை சுமப்பதே - தான்
வாங்கி வந்த வரமென்று சொல்கிறாள்

நரம்பு அறுந்த வீணையில் நாதத்தைத் தேடுகிற
நம்பிக்கை இவளுக்குத் தந்தவர் யார்? - ஒரு
சுரத்தோடும் சேராத ராகத்தில் சுகம்தேடும்
சோகத்தை இவளுக்குச் சொன்னவர் யார்?

வயிற்றுச் சூளைக்குள் வளர்ந்துவரும் உயிருக்கு
வாழ்வைத் தேடித்தர வாளியை சுமந்தாளா - அல்லதுஒரு
கயிற்றைக் கட்டிவிட்ட கணவனின் சுமைகுறைய
கனவுகளை விட்டொழித்து கையிலிதை எடுத்தாளா?

தாய்கூட மலமள்ளும் காலம் உண்டு - அது
தன் குழந்தை என்கின்ற சுயநலத்தால்
வாருகிறாள் சந்தனம்போல் எண்ணிக்கொண்டு - ஒரு
வாய்முணுத்தல் எந்நாளும் கண்டறியேன்

கண்டிப்பாய் இவளுக்கொரு மாற்றுவழி வேண்டும் - அதைக்
காட்டுதற்கு நம்மவர்க்கு முடியவில்லை என்றால் - ஒரு
கயிறு எடுத்து புளியமரம் தேட வேண்டும் !


No comments:

Post a Comment