Tuesday, February 16, 2010

எனக்கேது நேரம்

எங்கள் கதாநாயகனுக்கு
இது இரண்டாவது கல்யாணம்

ஏழெட்டு போஸ்டர்கள்
என்வீட்டுக்கு எதிரில்
இரவெல்லாம் கண்விழித்து
ஒட்டிவைத்தேன் சுவரில்

என்வீட்டு தங்கச்சி
விலையாகாமல் இருந்தால்
எனக்கென்ன வந்தது

திரையிலே கொடிகட்டிப்
பறக்கின்ற நாயகன்
இரவிலே கனவிலே
ஏக்கத்தைத் தந்தவள்
இருவரும் இணைகின்ற
மணவிழா நாளில்

ஏழெட்டுப் போஸ்டர்கள்
என்வீட்டுக்கு எதிரில்
இரவெல்லாம் கண்விழித்து
ஒட்டிவைத்தேன் சுவரில்

ஜன்னல் கம்பிகளில்
கன்னத்தைத் தேய்க்கிறாள்
கண்ணீர் அமிலத்தால்
கம்பிகளைக் கரைக்கிறாள்

அண்ணா எனக்கு
எப்போது கல்யாணம்
கண்ணாலே கேட்கிறாள்
நான் என்ன செய்வது ?

ரசிகர் மன்றத்தில்
பொறுப்புக்கள் அதிகம்
இவளுக்கு வரன்தேட
எனக்கேது நேரம்?

Monday, January 18, 2010

பழசு

புதுமையை நேசிக்கும்
என் வீட்டுப் பிள்ளைகள்
இளமைக் காலத்தில்
நான் கட்டிய வீட்டை
இடித்துத் தள்ளினார்கள்

இதைக் கட்டிய காலத்தில்
எத்தனை ஆனந்தம்

வாடகை வீட்டில்
நாயடி பட்டவன்
வாழ்க்கைக்கு விடுதலை
வழங்கிய வீடு

கார்த்திகை மாதத்தில்
கரம்பற்றி வந்தவள்
வலது காலை
முதலில் வைத்து
வந்த இடம் இதுதான்

இடிக்கச் சொல்லும்
பிள்ளைகள் எல்லாம்
இங்குதான்
பிறந்தார்கள்

சீமந்தப் புத்திரன் முதல்
கணிஷ்டக் குமாரன்வரை
தூங்குவதற்குத் தூளிகட்ட
இந்த இடம்தான்
இடம் தந்து மகிழ்ந்தது

தொட்டி முற்றத்தைச்
சுற்றிஓடும் பிள்ளைகளைத்
துரத்தி விளையாடுவேன்
நான்

முற்றத்து வெயிலில்
வற்றல் இடுவாள்
மனைவி

காக்கைகளிடம் இருந்து
அதனைக்
காத்துத் தரும்
முற்றம்

இடிக்கக் கூடாது என்று
எடுத்துச் சொல்வதற்கு
எவ்வளவு முயன்றும்
என்னால் முடியவில்லை

விழுதுகள் வேரூன்றி
விட்ட பின்பு
ஆணிவேருக்கு
அதிகாரம் ஏது?

பார்த்துப் பார்த்து
கட்டிய வீடு
பழசாகிப்
போய்விட்டதாம்

அடுக்கு மாடி ஒன்று
அழகாய் எழும்புமென்று
ஆறுதல் கூறினார்கள்

ஆனாலும்
பயத்தை நெஞ்சிலே
பதுக்கி வைத்துக் கொண்டு
நானும்
பழசாகிக் கொண்டிருக்கிறேன்!

அவள் சுமப்பது சிலுவை

ஆராதிக்க முடியாத அழகுடைய பெண்ணொருத்தி - மலத்தை
அள்ளிச் செல்ல வருகிறாள்

தோளிலே வாளியை சுமந்து கொண்டு - எங்கள்
தோட்டத்து வழியாக வருகிறாள்
வாயிலே புகையிலை குதப்பிக் கொண்டு - மலத்தின்
வாடையை மறக்கவே முயல்கிறாள்

வாளியில் சுமக்கின்ற நரகல் எல்லாம் - தன்
வாழ்க்கையின் பிரதிபலிப்பு என்கிறாள் - மகன்
வாய்க்கரிசி போடும்வரை வாளியை சுமப்பதே - தான்
வாங்கி வந்த வரமென்று சொல்கிறாள்

நரம்பு அறுந்த வீணையில் நாதத்தைத் தேடுகிற
நம்பிக்கை இவளுக்குத் தந்தவர் யார்? - ஒரு
சுரத்தோடும் சேராத ராகத்தில் சுகம்தேடும்
சோகத்தை இவளுக்குச் சொன்னவர் யார்?

வயிற்றுச் சூளைக்குள் வளர்ந்துவரும் உயிருக்கு
வாழ்வைத் தேடித்தர வாளியை சுமந்தாளா - அல்லதுஒரு
கயிற்றைக் கட்டிவிட்ட கணவனின் சுமைகுறைய
கனவுகளை விட்டொழித்து கையிலிதை எடுத்தாளா?

தாய்கூட மலமள்ளும் காலம் உண்டு - அது
தன் குழந்தை என்கின்ற சுயநலத்தால்
வாருகிறாள் சந்தனம்போல் எண்ணிக்கொண்டு - ஒரு
வாய்முணுத்தல் எந்நாளும் கண்டறியேன்

கண்டிப்பாய் இவளுக்கொரு மாற்றுவழி வேண்டும் - அதைக்
காட்டுதற்கு நம்மவர்க்கு முடியவில்லை என்றால் - ஒரு
கயிறு எடுத்து புளியமரம் தேட வேண்டும் !


Friday, January 1, 2010

ஒரு கிராமத்தின் கதை

ஏரிக்கரை ஓரத்தில
ஏழடுக்கு மெத்தை உண்டு
ஏழடுக்கு மெத்தையில்ல
எங்க ஊரு பண்ணையாரு

சேரிபுரம் எங்களுக்கு
சின்ன சின்ன வீடு உண்டு
மாடப்புறா கூட்டுக்குள்ள
மானத்தோட வாழ்ந்திருக்கோம்

பண்ணையாரு பெத்த மக
பட்டணத்தில் வாழ்ந்தவங்க
தென்னந்தோப்புகுள்ள நின்னு
தீரவில்ல தாகமுன்னு
சின்னப் பையன் கிட்ட வந்து
கண்ணைக் காட்டி சொல்லிப்புட்டா

என்ன செய்வான் சின்னப் பையன்
இந்த லோகம் மறந்துப்புட்டான்
சக்கிலியப் புள்ள அவன்
சாதியில தாழ்ந்தவங்க
சந்தித்திட வந்தவளை
சிந்திக்காம தொட்டுப்புட்டான்.

தொட்டுபுட்ட பாவத்துக்கு
தோலுரிச்சான் பண்ணையாரு
கட்டி வெச்சி சவுக்கெடுத்து
கெண்ட சதை பிச்சிப்புட்டான்.

எங்களோட உழைப்பு எல்லாம்
பண்ணையாரு வாழ்ந்திடத்தான்
எங்களோட ரத்தம் எல்லாம்
பண்ணையாரு சாட்டைக்குத்தான்.

சின்னப் பையன் தங்கச்சிக்கு
செம்பருத்தி என்று பேறு
கன்னி பொண்ணு எங்களுக்கு
கஞ்சி கொண்டு வந்திடுவா

சேல்விழிக்கு மையெழுதி
செம்பருத்தி ஆடி வந்தா
மால் மருகன் தன்னுடைய
மயிலேறி வந்திடுவான்

நெத்தியில பொட்டுவெச்சி
நீலமலர் ஆடி வந்தா
அத்தி கூட பூத்துவிடும்
அத்தனையும் பிஞ்சு விடும்

காட்டுப் பூனை பண்ணையாரு
கண்ணில் பட்டா செம்பருத்தி
காமன் அங்கு வில்லெடுத்தான்
கன்னிப் பொண்ணு மாட்டிக்கிட்டா

பாவி மகன் தேன்குடத்த
பாழ் கிணத்தில் ஊத்திப்புட்டான்
பூவைக் கிள்ளி மோந்துப்புட்டான்
போச்சுதடா வாசமெல்லாம்

அன்று தொட்டுப்புட்ட பாவத்துக்கு
தோலுரிச்ச பண்ணையாரை
இன்று தட்டிக்கேக்க நாதியில்ல
தர்மத்துக்கு வாழ்வு இல்ல

சாதியில தாழ்ந்தவங்க
சாகிரோங்க சோகத்தில
நீதி கேட்டு எங்களோட
நெஞ்சுலர்ந்து போச்சுதுங்க

மீசைக்கார பாரதியும்
ரோஷத்தோட பாடினாங்க
கேட்டுப்புட்டா போதாதுங்க
கேவலத்த மாத்திடுங்க.