Friday, January 1, 2010

ஒரு கிராமத்தின் கதை

ஏரிக்கரை ஓரத்தில
ஏழடுக்கு மெத்தை உண்டு
ஏழடுக்கு மெத்தையில்ல
எங்க ஊரு பண்ணையாரு

சேரிபுரம் எங்களுக்கு
சின்ன சின்ன வீடு உண்டு
மாடப்புறா கூட்டுக்குள்ள
மானத்தோட வாழ்ந்திருக்கோம்

பண்ணையாரு பெத்த மக
பட்டணத்தில் வாழ்ந்தவங்க
தென்னந்தோப்புகுள்ள நின்னு
தீரவில்ல தாகமுன்னு
சின்னப் பையன் கிட்ட வந்து
கண்ணைக் காட்டி சொல்லிப்புட்டா

என்ன செய்வான் சின்னப் பையன்
இந்த லோகம் மறந்துப்புட்டான்
சக்கிலியப் புள்ள அவன்
சாதியில தாழ்ந்தவங்க
சந்தித்திட வந்தவளை
சிந்திக்காம தொட்டுப்புட்டான்.

தொட்டுபுட்ட பாவத்துக்கு
தோலுரிச்சான் பண்ணையாரு
கட்டி வெச்சி சவுக்கெடுத்து
கெண்ட சதை பிச்சிப்புட்டான்.

எங்களோட உழைப்பு எல்லாம்
பண்ணையாரு வாழ்ந்திடத்தான்
எங்களோட ரத்தம் எல்லாம்
பண்ணையாரு சாட்டைக்குத்தான்.

சின்னப் பையன் தங்கச்சிக்கு
செம்பருத்தி என்று பேறு
கன்னி பொண்ணு எங்களுக்கு
கஞ்சி கொண்டு வந்திடுவா

சேல்விழிக்கு மையெழுதி
செம்பருத்தி ஆடி வந்தா
மால் மருகன் தன்னுடைய
மயிலேறி வந்திடுவான்

நெத்தியில பொட்டுவெச்சி
நீலமலர் ஆடி வந்தா
அத்தி கூட பூத்துவிடும்
அத்தனையும் பிஞ்சு விடும்

காட்டுப் பூனை பண்ணையாரு
கண்ணில் பட்டா செம்பருத்தி
காமன் அங்கு வில்லெடுத்தான்
கன்னிப் பொண்ணு மாட்டிக்கிட்டா

பாவி மகன் தேன்குடத்த
பாழ் கிணத்தில் ஊத்திப்புட்டான்
பூவைக் கிள்ளி மோந்துப்புட்டான்
போச்சுதடா வாசமெல்லாம்

அன்று தொட்டுப்புட்ட பாவத்துக்கு
தோலுரிச்ச பண்ணையாரை
இன்று தட்டிக்கேக்க நாதியில்ல
தர்மத்துக்கு வாழ்வு இல்ல

சாதியில தாழ்ந்தவங்க
சாகிரோங்க சோகத்தில
நீதி கேட்டு எங்களோட
நெஞ்சுலர்ந்து போச்சுதுங்க

மீசைக்கார பாரதியும்
ரோஷத்தோட பாடினாங்க
கேட்டுப்புட்டா போதாதுங்க
கேவலத்த மாத்திடுங்க.

No comments:

Post a Comment