Sunday, January 23, 2011

ஒரு குயில் தன் குரலை தேடுகிறது


மண்ணு வெட்டப் போனபோது 
மண்ணு தூக்க நானும் வந்தேன் 
கழனி வேலை செய்யும் போது
களை எடுக்க கூட வந்தேன்

ஏத்தம் ஏறி நீ மிதிச்சா 
இறைச்சிவிட்டேன் தண்ணி எல்லாம்
சோத்தை கூட ஆக்கித் தந்தேன் 
சொகமாத் தான் நீயிருந்த


ஆத்தங்கரை ஓரத்தில - நீ
ஆசையோட மீனு வெச்சி 
வாட்டத்தோட திண்ணும்போது - உன் 
வாய் பார்த்து பசியடங்கும் 


என்னை விட்டுப் போன மச்சான் - உனக்கு 
எண்ணிப் பார்க்க ஏது நேரம்?
கண்ணைக் காட்டி மயக்கிப்புட்டா 
கருத்த மவ சக்காளத்தி 


பொதிகை மலை மேலிருந்து 
பூங்காத்தே மெல்ல வீசு 
விதியை எண்ணி நொந்து போனேன் 
வேலவரை கண்டு சொல்லு


திண்ணையோரம் நின்னுக்கிட்டு 
தெரு வழியே பார்த்துகிட்டு 
கண்ணகி போல் இந்தப் பொண்ணு 
காத்திருக்கும் செய்தி சொல்லு


வயத்துக்குள்ள முத்து ஒண்ணு
வளர்ந்துவரும் செய்தி சொல்லு 
வாரம் ஒரு நாளாச்சும் 
வந்து பார்த்து போகச் சொல்லு


கண்ணுக்குள்ள மையெழுதும் 
கருத்த மவ சக்காளத்தி 
கால் சலங்கை தாளத்துக்கு 
கைதியனான் எம்புருஷன் 


இது சாணி மிதிச்ச காலு 
சத்தியமா வாழுதடி 
சண்டாளன் நினைக்கலடி 
சாவு வந்தா தேவலடி.

3 comments:

  1. ஆஹா!
    வேறொருத்தி சீலையிலே சிக்கிட்ட சிறுக்கனை
    பாவி மவ மறக்காம பாசத்தோட பாடுறாளே..
    அத்தை மவ உருகறா
    சீக்கிரமா வந்துடு ..

    நல்லா இருக்கு சார்

    ReplyDelete
  2. பெண் மனது படும் பாட்டை ...அப்படியே சொல்லியிருக்கிறீர்கள் நன்று ...

    ReplyDelete